கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நேற்று (31/01/2022) தை அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக தை அமாவாசை அன்று பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து அனுமதி வழங்கப்பட்டது. இதனால்நேற்று அதிகாலை 4.00 மணியில் இருந்தே பெரும்பாலான மக்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கடற்கரையில் உள்ள விநாயகர் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரம் காசிவிஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.