கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல வழித்தடங்களில் ரயில்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லை வழியாக தினமும் சென்னை சென்று வரும் செந்தூர் விரைவு ரயிலும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் ரயில்கள் எதுவும் செல்லாத நிலையில், இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக திருநெல்வேலி முதல் ஸ்ரீவைகுண்டம் வரை உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் இன்று திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் உள்ள குறிச்சி ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறிச்சி ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் கொக்கிரகுளம் - குறிச்சி சாலை வழியாக வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் இன்று ஒரு நாள் மாற்றுப்பாதையில் பயணம் செய்யும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.