திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யாஸ் புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலும் தொடர்ந்து மூன்று நாட்களாக கன மழை பெய்து வந்தது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையாக விளங்கும் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி அதிகரித்து கடல் போல காட்சியளித்தது. தற்போது நீர் இருப்பு 129.15 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 9563.88 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அணையில் இருந்து 467.25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கோடை காலமான இந்த மே மாதத்தில் மட்டும் இது வரை பாபநாசம் அணை பகுதியில் 302 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.