கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக தற்போது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல வழித்தடங்களில் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில்வே பாதைகளில் நடந்து வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று பாளையங்கோட்டை திருவனந்தபுரம் சாலையில் உள்ள, குலவணிகர்புரம் ரயில்வே கேட் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
இந்த பராமரிப்பு பணி நடைபெற்ற போது குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியை ஒட்டி ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண்டப்பட்டு, தண்டவாளம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 04/06/2021 அடுத்த கட்டமாக பெருமாள்புரம் ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பெருமாள்புரம் ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இன்று ஒருநாள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.