திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தினசரி சந்தை தற்போது பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றைக் கருத்தில் கொண்டு காவலர் குடியிருப்பு மைதானத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மார்க்கெட் வளாகம் நெருக்கடி மிகுந்து காணப்படுவதால் அங்குச் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
மைதானத்தில் போதிய இடைவெளியில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் நெருக்கடி இல்லாமல் பொருட்களை வாங்கி செல்ல முடியும். இங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மக்களிடையே முகக்கவசம் அணிவது பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொருட்களை வாங்குவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களைக் கண்காணித்து வந்தார்கள். இதனால் சிரமமின்றி அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றிப் பொருட்களை வாங்கி செல்ல முடிந்தது.