கார் பருவ சாகுபடிக்காக ஜூன் 1-ந் தேதி அன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு ஆகிய மூன்று அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக பாய்ந்தோடி, திருநெல்வேலிக் கால்வாய், பாளையங்கால்வாய் , நதியுண்ணிக் கால்வாய், கோடகன் கால்வாய் உள்பட 11 கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு செல்லும்.
இதனை அடுத்து நேற்று திருநெல்வேலி - மேலச்செவல் பகுதியில் உள்ள பாளையங்கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்துல்வகாப் அவர்கள் கலந்து கொண்டு பாளையங்கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீர் மூலம் 7 குளங்கள் மற்றும் 22 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 5,974 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாசன வசதி பெறக்கூடிய அனைத்து விவசாய நிலங்களிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.