தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மாநிலம் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறிச் சாலைகளில் பயணம் செய்பவர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன தண்டனைகளை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தினமான நேற்று, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை நகர் பகுதிகளில் நேற்று காரணமே இல்லாமல் விதிமுறைகளை மீறி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்களை நடமாடும் மருத்துவக் குழுவினர் மூலம் தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை செய்தவர்களின் முகவரி, செல்போன் எண் ஆகியவையும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்குக் கொரோனா நோய்பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்பட்டது.