திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தை மாதம் பிறந்த உடன் நுங்கு மற்றும் பதநீர் விற்பனைக்கு வரத் துவங்குவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் தற்போது நுங்கு, பதநீர் விற்பனை மாநகர பகுதிகளில் சூடுபிடித்துள்ளது. இரவு முதல் அதிகாலை வரை மாநகர பகுதிகளில் பனிப்பொழிவு காணப்பட்டாலும், பகல் முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ளவும், கோடை வெப்பத்தில் இருந்து குளிர்ச்சி பெறவும், உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பதநீர் மற்றும் நுங்கு ஆகியவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மாநகரில் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, புறவழிச்சாலை, பெருமாள்புரம், சந்திப்பு ரயில் நிலையம், தச்சநல்லூர், குறுக்குத்துறை சாலை, மஹாராஜநகர், தியாகராஜநகர் உள்ளிட்ட பல இடங்களில் தற்காலிக நுங்கு, பதநீர் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.