தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரை பொறுத்தவரை ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகப்படியான வாகனங்கள் சாலைகளில் உலா வருகின்றன. அதில் இ-பதிவு செய்யாத இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சாலைகளில் உலா வருகின்றன. இதனை கட்டுப்படுத்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், நேற்று மாநகர பகுதிகளில் வாகனங்களில் அனுமதி பெறாமல் சென்றவர்களையும், அத்தியாவசிய தேவையின்றி சுற்றியவர்களையும் போக்குவரத்து காவலர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
மேலும் மாநகரில் வண்ணார்பேட்டை, சந்திப்பு ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் அனுமதி பெறாமலும், அத்தியாவசிய தேவையின்றியும் பயணம் செய்த சுமார் 50-க்கும் மேற்பட்டோரை பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.