அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் வலுவடைந்து புயலாக மாறியது. "டவ்தே" என்று பெயரிடப்பட்ட இந்த புயலின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகத் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. ஊரடங்கு காரணமாக அருவிகளில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாகக் கொட்டியது. பாபநாசம், களக்காடு உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்த மழையால் முக்கிய அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105.60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 119.36 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 86 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 42.49 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 12.53 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 15 அடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.