கொரோனா நோய் தொற்று தற்போது பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாநகரில் விதிமுறைகளை மீறி மக்கள் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் சாலைகளில் பயணித்து வருகிறார்கள். ஊரடங்கை கண்காணிக்க மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தற்காலிக சோதனை சாவடிகள் ஏற்படுத்தி மக்களை கண்காணித்து வருகிறார்கள். எனினும் நேற்றும் சாலைகளில் பயணிக்கும் மக்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர காவல்துறையினர் நேற்று அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் பயணம் மேற்கொண்ட நபர்களை தடுத்து நிறுத்தி அவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்தும், தேவையில்லாமல் சாலையில் பயணம் செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைத்தும், எழுத்துபூர்வமாக உறுதிமொழி எழுத வைத்தும் அவர்களுக்கு நூதன தண்டனைகள் வழங்கி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று முதல் மாநகர சாலைகளில் அத்தியாவசிய தேவையின்றி பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.