தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு வீடு வீடாக சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அரசு அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் காய்கறிகள் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள காரணத்தால், வீடுகளுக்கே சென்று பலசரக்கு பொருட்களையும் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
திருநெல்வேலி மாநகரில் சுமார் 300 வியாபாரிகளுக்கு வாகனங்கள் மூலம் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் வாகனங்கள் மூலம் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் அரசாங்கம் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து, ஊரடங்கு காலம் முடியும் வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பலசரக்கு பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர பகுதிகளில் முதல்கட்டமாக தொடங்கப்படும் இந்த சேவை, மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.