கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அங்கு தங்கியிருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் மூலம் உணவு தயார் செய்து விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில் சார்பாக அரசு உத்தரவின் படி திருக்கோவில் அன்னதான மண்டபத்தில் உணவுகள் தயார் செய்யப்பட்டு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நேற்று திருக்கோவில் நிர்வாகம் சார்பாக சுமார் 500 நபர்களுக்கு தேவையான இரவு உணவு பொட்டலங்களாக தயார் செய்யப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், அவர்களுடன் தங்கியுள்ள உறவினர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. ஊரடங்கு காரணமாக தற்போது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த உணவு பல பேர்களின் பசியை போக்குவதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.