தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான காய்கறிகளை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே நேரில் சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளிலும் இதனை பின்பற்றி, அனுமதி பெற்ற வியாபாரிகள் மூலம் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வியாபாரிகள் அனைவரும் விற்பனைக்கு தேவையான காய்கறிகளை வாங்க ஒட்டுமொத்தமாக நெல்லை மாநகரில் உள்ள நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் குவிகிறார்கள். இதனால் சமூக இடைவெளி இன்றி கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள், மாநகர காவல்துறை ஆணையர் திரு.பிரவீன்குமார் அபிநபு அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் ஆகியோர் காய்கறி வியாபாரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த 60 சில்லறை விற்பனை கடைகள், சாப்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டன. நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும், சாப்டா் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தற்காலிக கடைகள் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடைகளில் அனுமதி பெற்ற வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.