முன் கார் பருவ காலத்தில் நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்படும். தரத்திற்கு பெயர் போன நாட்டு உளுந்து சாகுபடி நெல்லை டவுன், மானூர், பாட்டப்பத்து, கண்டியப்பேரி, இராமையன்பட்டி, மானூர், அணைத்தலையூர், தச்சநல்லூர், சேந்திமங்கலம் ஆகிய பகுதிகளில் வருடம்தோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான முன் கார் பருவ காலத்தில் உளுந்து சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது விளைச்சல் பெருகி உளுந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
பொதுவாக விவசாயிகள் தங்கள் வயலில் இருந்து கூலியாட்கள் மூலம் உளுந்து நெத்தினை பறித்து, சாலையில் போட்டு கம்பால் அடித்து உளுந்தை பிரித்து எடுப்பார்கள். காலமாற்றத்தினால் தற்போது உளுந்து அறுப்படைக்கு, நெல் அறுவடை செய்யும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக கூலியாட்களும், அறுபடை இயந்திரங்களும் கிடைக்காத காரணத்தால் தங்கள் வயலில் விளைந்துள்ள உளுந்து நெத்துக்களை தாங்களே பறித்து சாலையில் பரப்பி, தங்கள் சொந்த நான்கு சக்கர வாகனங்களை நெத்தின் மீது ஏற்றி உளுந்தினை பிரித்து எடுத்து வருகிறார்கள். தற்போது ஜூன் மாதம் முதல் வாரம் கார் பருவ சாகுபடி துவங்க உள்ளதால், வயல்களில் உள்ள உளுந்தினை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.