கார் பருவ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதியான நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு ஆகிய மூன்று அணைகளில் இருந்தும் தமிழக அரசு உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை காரையாறு பகுதியில் உள்ள பாபநாசம் அணையை கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் திரு.அப்பாவு அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு, திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு.நயினார் நாகேந்திரன், முன்னாள் சபாநாயகர் திரு.ஆவுடையப்பன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாபநாசம் அணையில் இருந்து இன்று முதல் வருகிற 15.10.2021-ந்தேதி வரை 137 நாட்களுக்கு திறந்துவிடப்படும் இந்த தண்ணீர் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுபோல மணிமுத்தாறு அணையில் இருந்தும், வடக்குபச்சையாறு அணையில் இருந்தும் கார் சாகுபடிக்காக சபாநாயகர் திரு.அப்பாவு அவர்கள் தண்ணீர் திறந்து வைத்தார்.
ஜூன் மாதம் 1-ந்தேதி பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் மூன்று அணைகளும் ஒரே நாளில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு நாளை மறுநாள் முதல் தென்மேற்கு பருவமழையும் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் இந்தாண்டுக்கான கார் பருவ சாகுபடி களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.