தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த தளர்வில்லா ஊரடங்கு காரணமாக நெல்லை மாநகரில் உள்ள அனைத்து கடைகள் , வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் தற்போது நெல்லை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறையத் தொடங்கிய நிலையில் அந்த மாவட்டங்களில் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்த தளர்வுகளின் படி நெல்லை மாநகரில் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை அத்தியாவசிய தேவைகுள், மற்றும் முக்கிய தேவைகளை வழங்கும் கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் நேற்று காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காய்கறி சந்தைகள், பழக்கடைகள், மளிகைக் கடைகள் , இறைச்சிக் கடைகள், பிளம்பிங், எலக்ட்ரிகல், ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன. மேலும் கொரோனா நோய்த்தொற்று குறையும் பட்சத்தில், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.