தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை சேவை தொடங்கப்பட்டது.
தினமும் அத்தியாவசியமாக தேவைப்படும் காய்கறி பொருட்களை வீடு தேடி சென்று விற்பனை செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாளையங்கோட்டை மண்டலத்தில் 122, மேலப்பாளையத்தில் 120, நெல்லை மண்டலத்தில் 57, தச்சநல்லூர் மண்டலத்தில் 40 என மொத்தம் 339 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாநகரில் இதுவரை 480 டன் அளவுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் 4 சக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் செல்ல முடியாத குறுகலான சந்து பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை செய்யும் சேவையும், கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.