திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் கொரோனா நோய்த் தொற்றை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் நபர்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பாளையங்கோட்டை, சமாதானபுரம், முனிசிபல் காலனி, காமராஜ் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சுமார் இரண்டாயிரம் நபர்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை திருநெல்வேலி மாநகராட்சி, சேவா பாரதி மற்றும் பாரதி சேவா கேந்திரம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தியது.
இதில் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் நடராஜன், நெல்லை சேவா பாரதி மற்றும் பாரதி சேவா கேந்திரம் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்