தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அதனை தடுக்க மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதனை பின்பற்றி நெல்லை மாவட்டத்தில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தி நோய் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுகாதாரத்துறையினருக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் தலைமையில் சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று நெல்லை மாநகர பகுதிகளான நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், நெல்லை டவுன் ஆகிய பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.