வைகாசி விசாகம் அன்று தான் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமான் அவதரித்தார். எனவே ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று முருகன் கோவில்களில் சிறப்பு விழாக்கள் மற்றும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும். தற்போது கொரோனா தொற்று காரணமாக திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற வைகாசி விசாக விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் பக்தர்கள் முருகன் கோவில்களின் வாசலில் நின்றபடியே கற்பூரம் ஏற்றி வைத்தும், தேங்காய் உடைத்தும், பூட்டியிருந்த கோவில் கதவுகளில் பூமாலை சாற்றியும் முருகப்பெருமானை நினைத்து வழிபட்டனர்.
பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்க பட்டுள்ள நிலையில் நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திருக்கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்கள் மூலம் மாநகர பகுதியில் உள்ள பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், குட்டத்துறை முருகன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், திருநெல்வேலி சந்திப்பு சாலைக்குமாரசுவாமி திருக்கோவில் மற்றும் பிற முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனை நடைபெற்றது.