திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மாநகரில் உள்ள பாளையங்கோட்டை காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம், மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி வளாகம், தருவை பிரான்சிஸ் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்கியது.
இந்நிலையில் கூடுதலாக தற்போது திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலும் 200 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தான உணவு, சுத்தமான குடிநீர், சித்த மருந்துகள், ஆக்சிஜன் சேவை ஆகியவற்றை வழங்கி நோயாளிகளை கவனித்திட போதுமான செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.