நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் மருத்துவர்களை தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பல மருத்துவர்கள், செவிலியர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கூடுதலாக தற்காலிக மருத்துவர்களை நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கான நேர்முகத்தேர்வு நேற்று திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை முடித்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அவர்களது சான்றிதழ்களை மருத்துக்கல்லூரி அலுவலர்கள் சரிபார்த்தனர். இவர்களில் இருந்து தகுதியுடைய மருத்துவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர்களாக மாதம் 60 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.