திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சுமங்கலி பூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பெண்களுக்கான மாங்கல்ய பாக்கியத்தை அருளக்கூடிய மகாலட்சுமி வழிபாடு என்பது வரலட்சுமி நோன்பின் மகத்துவம். இந்த நோன்பு விழா நெல்லையப்பர் கோவிலில் மிகவும் விமரிசையாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது .
நெல்லையப்பர் கோவிலில் இளைய பாரதம் அமைப்பு மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழுவும் சேர்ந்து சுமங்கலி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலமோடு இருக்க வேண்டி இருக்கும் இந்த விரதம் தாலிபாக்கியம் நிலைப்பதற்கும் , செல்வம் சேருவதற்கும் வழி வழியாக தொன்று தொட்டு நம் முன்னோர்கள் காலத்திலிருந்து கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் வரலட்சுமி நோன்பு விழா நெல்லையப்பர் கோவிலில் சிறப்பாக நடந்து வருகின்றது. இந்த வருடத்திற்கான வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
1008 பெண்கள் இந்த சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டனர் . ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிறப்பான அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர் . சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது . பெண்கள் அனைவரும் தங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த கலசத்திற்கு சிறப்பான சுமங்கலி பூஜை வழிபாடுகள் நடத்தினர்.
ஏராளமான பெண்கள் சுமங்கலி பூஜை விழாவில் கலந்து கொண்டு புதிய மாங்கல்ய கயிறு மஞ்சள் குங்குமம் உள்ளிட்டவற்றை பெற்று கொண்டனர். நெல்லையப்பர் காந்திமதி கோவிலில் மாலை 4 மணி அளவில் சுந்தரமூர்த்தி நாயனார் யானை வாகனகத்திலும் சேரமான் பெருமாள் குதிரை வாகனத்திலும் மற்றும் 63 நாயன்மார்கள் திரு வீதி உலா நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
Image source: dailythanthi.com