- ஆனித் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது
- கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்
நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
வருகிற 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் அம்பாள் கோவில் திருவிழா தொடங்குகிறது. 11 ஆம் தேதி திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது.
அதற்கான வசதிகள் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு ரத வீதிகளிலும் தார்சாலை சீரமைக்கப்பட்டு தூய்மை செய்யும் பணி, பொது சுகாதார பிரிவு மூலம் மருத்துவ முகாம்கள், வருகை புரியும் பக்தர்களின் வசதிக்காக சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் , தங்கு தடையின்றி செல்ல சாலையோர ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்துதல் என காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக கலெக்டர் விஷ்ணு அறிவித்தார்.
கோவிலை சுற்றியுள்ள மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடங்களில் கட்டணமின்றி பொதுமக்கள் பயன்படுத்தவும் ,நடமாடும் கழிப்பறை வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர் செல்லும் பாதையில் உள்ள மின் கம்பிகளை முன்னரே அகற்றி தங்கு தடையின்றி செல்ல வசதியாக தெருவிளக்குகளை தேவைக்கேற்ப திருப்பி வைக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
போக்குவரத்துக்கு இடையூறு இன்றி ஆங்காங்கே வாகன நிறுத்துமிடம் , பக்தர்களின் பாதுகாப்பு கருவி ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் அமைக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது .
போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி ,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் அயூப், நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர் மகேஸ்வரி ,கவுன்சிலர் ராமகிருஷ்ணன், மாநகர பொறியாளர் அசோகன் , மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், உதவி ஆணையாளர் பைஜு உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Image source: Dailythanthi.com