கொரோனா இரண்டாம் அலை நோய் தொற்று வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் நேற்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். திருநெல்வேலி மாநகரத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக நேற்று மாநகரில் உள்ள நயினார்குளம் மார்க்கெட், திருநெல்வேலி டவுன் மார்க்கெட், தற்காலிக மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட், உழவர் சந்தை, வணிக வளாகங்கள், உணவு கூடங்கள், ஜவுளி நிறுவனங்கள், டீ கடைகள் என அனைத்து பெருவாரியான கடைகள் மற்றும் மார்கெட்களும் அடைக்கப்பட்டன.
மாநகரில் ஆங்காங்கே அத்தியாவசிய தேவைகளுக்கு உதவும் வகையில் மருந்து கடைகள், பால் கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்திருந்தன. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததால் மாநகர் முழுவதும் போக்குவரத்து இன்றி அமைதியாக காணப்பட்டது. குறிப்பாக அதிகமான போக்குவரத்து நெரிசலை கொண்ட பகுதிகளான வண்ணாரப்பேட்டை சந்திப்பு, முருகன்குறிச்சி சாலை, பாளையங்கோட்டை சந்திப்பு, கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம், சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம், திருநெல்வேலி டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை மற்றும் மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி இருந்தது.
ஊரடங்கை முழுமையாக கண்காணித்து வந்த மாநகர காவல் துறையினர், காரணம் இல்லாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த நபர்களை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பியும், மாஸ்க் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும் தங்கள் பணியை செய்தனர். மாநகரில் நேற்று அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகர் மட்டும் அல்லாது மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பகுதிகளிலும் ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.