தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், தனியார் வாகன போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாநகரின் முக்கிய இடங்களான வண்ணாரப்பேட்டை சந்திப்பு, தெற்கு புறவழிச்சாலை, சந்திப்பு இரட்டை மேம்பாலம், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, சுவாமி நெல்லையப்பர் ரத வீதிகள், பாளையங்கோட்டை தெற்கு பஜார், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி ஆகியவைகள் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்பட்டது.
மாநகரில் பிற்பகல் 12.00 மணி வரை செயல்பட்ட காய்கறி கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளிலும் அதிக மக்கள் கூட்டமின்றி காணப்பட்டது. பேருந்துகள் இயங்காததால் வண்ணாரப்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக புறவழிச்சாலை பணிமனையில் அரசு பேருந்துகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் போக்குவரத்து நிறைந்து காணப்படும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மாநகரில் போக்குவரத்து காவலர்கள் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து ஊரடங்கை கண்காணித்து வந்தனர்.