தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கியதை ஒட்டி கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இந்த அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், களக்காடு, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் பரவலாக மழை பெய்தது. நேற்றைய நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 134.50 அடியாக இருந்த நிலையில், அணைக்கு 888.13 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.1,292.25 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 87.70 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 155 கனஅடி தண்ணீர் வருகிறது. 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
156 அடி முழுக்கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 140.48 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.
இது தவிர மாவட்டத்தில் உள்ள வடக்கு பச்சையாறு அணை 39.70 அடியாகவும், நம்பியாறு அணை 12.43 அடியாகவும், கொடுமுடியாறு 28 அடியாகவும், கடனா அணை 74 அடியாகவும், ராமநதி 64 அடியாகவும், கருப்பாநதி 59.77 அடியாகவும் உள்ளது. தென்மேற்கு பருவ மழை மேலும் தீவிரமடையும் நிலையில் அணைகளுக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிய வருகிறது!