தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக நேற்று முன்தினம் வரை நன்றாக தண்ணீர் விழுந்த நிலையில், நேற்று அருவிகளில் நீர்வரத்து குறைந்தே காணப்பட்டது. நேற்று பேரருவியின் ஆண்கள் பகுதியில் குறைவாகவும், பெண்கள் பகுதியில் பாறையை ஒட்டியும் விழுந்த தண்ணீரில் குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் குளிப்பதை காண முடிந்தது. தற்போது பெய்து வரும் கோடை மழை என்பது அதிக நேரம் நீடிக்காது என்பதால் அருவிகளில் தண்ணீர் விழுவதும் அதிகரித்தும், குறைந்தும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வாரத்தின் இறுதி நாட்கள் என்பதால் இன்றும், நாளையும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.