தென்மேற்கு பருவ மழைக்காலம் துவங்கிய நிலையில் தற்போது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழத் துவங்கி உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் குறிப்பிட்ட பருவத்தில் குற்றாலம் சீசன் துவங்கியுள்ளதால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்ற வருடமும் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த வருடமாவது அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் உள்ளம் கவர்ந்த குற்றாலத்தில் இந்த வருடம் மிகச்சரியாக ஜூன் மாத துவக்கத்தில் சீசன் துவங்கி உள்ள நிலையில், குற்றாலம் பகுதியில் இதமான தென்றல் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் குற்றாலத்தில் உள்ள பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நன்றாக தண்ணீர் விழத்துவங்கி உள்ள நிலையில், இவ்வருட குற்றால சீசன் இனிதே துவங்கியுள்ளது!