திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கொட்டித் தீர்த்த மழையினால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், பழைய குற்றாலத்தில் படிகள் வழியாகவும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தற்போது கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அருவிக்கரைக்கு செல்லவோ, அருவியில் நீராடவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் குற்றால சீசன் துவங்கும் அறிகுறிகள் தென்படும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் குற்றால அருவிகளில் குளிக்க பொது மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.