திருநெல்வேலி மாவட்டம்., கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரண்டாவது அணு உலையில் உள்ள டர்பன் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி நேற்று அதிகாலை முதல் தொடங்கப்பட்டு, தற்போது 660 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு நாட்களில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தியை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.