திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்கு மூன்றாம் மற்றும் நான்காம் அணு உலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகள் அமைப்பதற்கு தேவையான காங்கிரீட் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கு ம் இந்த உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டாம் அணு உலையில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, நேற்று முன்தினம் முதல் மின்உற்பத்தி தொடங்கிய நிலையில், தற்போது முதலாம் அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணி மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணி ஆகியற்றின் காரணமாக நேற்று முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் சுமார் 45 முதல் 60 நாட்கள் வரை நடைபெறும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.