தென்காசி மாவட்டம்., கடையத்தில் சேவலாயா சார்பாக பாரதியார் நூலக கட்டிடத்தில் அமைக்கப்படவுள்ள செல்லம்மாள் - பாரதி மையத்துக்கு நேற்று சபாநாயகர் திரு. அப்பாவு அவர்கள் அடிக்கல் நாட்டினார். பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் சொந்த ஊரான கடையத்தில் சில காலம் பாரதியார் தங்கியிருந்து, வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்மன் கோவில் முன்புள்ள பாறையில் அமர்ந்து "காணி நிலம் வேண்டும் பராசக்தி" என்ற பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. பாரதியார் தனது மனைவியுடன் இங்கு வாழ்ந்த காலத்தில் அவரது மனைவி தோள் மீது கைப்போட்டு நடந்து செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். இப்போது அதே ஊரில் செல்லம்மாளின் தோள் மீது பாரதியார் கைபோட்டபடி நிற்கும் சிலையும் புதிதாக அமையவுள்ள மையத்தில் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்ட நிலையில், பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி அவர்கள் இணையவழியில் சிறப்புரை ஆற்றினார்.