திருநெல்வேலி மாவட்ட அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, நம்பியாறு, கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு ஆகிய ஆறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் இருந்து விவசாய பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நாள் தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளில் ஜூன் முதல் நாள் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு கோடை காலத்தில் பெய்த மழையினால் அணைகளில் தண்ணீர் இருப்பு போதுமான அளவு இருப்பதால், ஜூன் முதல் நாளான இன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று திறந்து விடப்படும் இந்த தண்ணீரினால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வயல்களில் விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.