திருநெல்வேலி மாவட்டம்., பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் மலைவாழ் மக்களான காணி இன மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக காரையார், காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி, சேர்வலாறு ஆகிய பகுதிகளில் மற்றும் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர் .
வனப்பகுதியில் வாழும் காணி இன மக்கள் கிழங்கு, மிளகு, பலா, கிராம்பு உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வாழும் காணி மக்கள் உடல்நிலை சரியில்லாமல் போனால் பாரம்பரிய மருத்துவமுறை மூலம் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி வந்த நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் காணி மக்கள் தடுப்பூசி போடுவதற்கு மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் நேரில் சென்று காணி இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பூசிப் போட்டுக்கொள்ள சம்மதிக்க வைத்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள் தலைமையில் காணிக்குடியிருப்பு பகுதியில் வாழும் காணி இன மக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காணி மக்கள் சுமார் நூறு பேறுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.