தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி உலகளவில் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு ஆண்டு தோறும் தை மாதம் துவங்கி ஆடி மாதம் வரை பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கப்பட்டு, கருப்பட்டி உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறும். இந்த ஆண்டு உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் நல்ல மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், பதநீர் உற்பத்தியும் பெருகியுள்ளது. இதனால் தற்போது முன்னதாகவே பதநீர் இறக்கும் பணியும், கருப்பட்டி உற்பத்தி செய்யும் பணியும் உடன்குடியில் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கருப்பட்டி உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் என்பதாலும், பொதுமக்களிடமும் அதன் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும் வரும்காலங்களில் கருப்பட்டியின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.