தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டம்., செங்கோட்டை நகராட்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். செங்கோட்டைக்கு நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், 3 குழுவாக பிரிந்து சுழற்சி முறையில் நகரின் எல்லை பகுதியில் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அது போல தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் வழியாக சுரண்டை செல்லும் நெடுஞ்சாலையில் தாசில்தார் கருணாகரன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். இதுபோல தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் உட்பட பல்வேறு இடங்களிலும் நேற்று வாகன சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.