விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்
இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அரசு சார்பாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பாப்பான்குளம், நல்லுகுறிச்சி, வேலங்குடி, இருஞ்சிறை, உலக்குடி, பனைக்குடி, நாலூர், வேளானேரி, எஸ். வல்லகுளம் ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவு பிறப்பித்த நிலையில் வேலங்குடி, நாலூர், இருஞ்சிறை, உள்பட பல்வேறு இடங்களில் இதுவரை அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த நெல்லை விற்பனை செய்ய மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், மேற்கண்ட இடங்களிலும் விரைவாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.