நோன்பு கலசம் வைக்கும் போது ஆத்மார்த்தமாய் மகாலட்சுமியை நினைத்து கலசம் வைக்கும் முறை
வாழ்க்கை சிறப்பதற்கு, மாங்கல்யம் நிலைப்பதற்கு, மனமெல்லாம் மகிழ்வதற்கு, மங்கலம் அமைவதற்கு ,குலம் தழைப்பதற்கு, இறைவனை வேண்டி வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைத்துப் படைப்பது சிறப்பு.
நோன்பு எடுக்கும் பெண்கள் திருமணத்தன்று கட்டுகின்ற பட்டுப்புடவை தழைதழைக்க, தலை நிறைய மல்லிகை சரம் நிறைய வைத்து , நெற்றி நிறைய குங்குமத்தோடு ,இந்த நோன்பு எடுத்தல் மிகவும் சிறப்பு.
தெய்வீக சிறப்பு வாய்ந்த நோன்புக்கான கலசம் வைத்து சுமங்கலி பெண்கள் மனதால் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்கும் முறை;
'தெள்ளத் தெளிகின்ற பால் போன்ற மனம் கொண்டு ,மனம் முழுதும் நின் அகம் கொண்டு ஆழ்மனதில் நெய்யூற்றி நீ ஏற்றுகின்ற தீபத்திலே ஒளிர்கின்ற ஒளிதனை முழுதாக நிறை கொண்டு ஏற்றுக் கொண்டேன் என் மகளே ! தீர்க்க சுமங்கலி பவ ' என மகாலட்சுமியின் குரல் காதினில் ஒலிக்க ஆனந்தத்தோடு ஐந்து முக விளக்கேற்றி..
'வாழையடி வாழையாக குலம் தழைப்பதற்கு அருள்புரிவாயே என் தாயே ' என வேண்டி தலை வாழை இலை வைத்து ..
'அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்று அன்னமிடும் என் கைகளுக்கு இல்லை என்று சொலாது அனைவருக்கும் மனமுவந்து அளிப்பதற்கு அளவில்லாத பொருளை கொடுக்க வேண்டும் என் தாயே' -என வேண்டி , படி நிறைவாக வாழை இலையினில் வெண்மையான பூ போன்ற பச்சரிசி இட்டு …
வெள்ளி சொம்பு அல்லது பித்தளை சொம்பு அல்லது பஞ்சலோக சொம்பு என வசதிக்கேற்றவாறு சொம்பினில் கங்கை நீர் -காவிரி நீர் என புனிதமான நீராக நினைத்து சொம்பு நிறைய சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நீர் நிறைத்து ..
'செல்வகடாட்சம் நிறைந்த வாழ்க்கை என்றும் நிலவ அருள் புரிவாயே என் தாயே ' என வேண்டி அதில் தங்க காசு, வெள்ளி காசு அல்லது ஒரு ரூபாய் நாணயம் சொம்பில் இட வேண்டும்.
மாவிலை 11 இலைகளை கொண்ட குருத்தை- நீர் நிரம்பிய சொம்பில் இட்டு . தேங்காய்க்கு மஞ்சள் குழைத்து பூசி குங்குமம் இட்டு மாவிலையின் மேல் தேங்காயை வைத்து, மகிழ்ச்சி ,மணம் ,வாசம் ,அழகு நிறைந்த மல்லிகை மலரோடு வண்ண மலர்கள் கொண்ட மாலையை தேங்காயின் மேல் சாற்றி வழிபடுதலே நோன்பின் சிறப்பு.
அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்பதால் ஒன்பது நூல் இழைகளால் ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் மங்களத்தின் அம்சமாக கலசத்தின் மேல்வைத்த படைத்து வலது கையில் அணிந்து கொள்வது மிக சிறப்பு.
சுமங்கலி பெண்கள் வரலட்சுமி நோன்பு அன்று குங்கும பஞ்சதசி பாமாலை பாட வேண்டும். குங்குமத்தால் அர்ச்சனை செய்வது சகல சௌபாக்கியத்தையும் கொடுக்கும். .மகாலட்சுமியின் மனதை குளிர வைத்து அவளுடைய அனுக்கிரகம் பெற்று , பெரியவர்களின் வாழ்த்து பெற்று வாழ்வினில் வளம் பெறுவோம்.
அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவில் பிரம்மோற்சவ விழா
திருநெல்வேலி மாவட்டம் இட்ட மொழி நெல்லையில் வடக்கு விஜயநாராயணம் அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
நெல்லை வடக்கு விஜயநாராயணத்தில் பிரசித்தி பெற்ற அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரம்மாண்டமாக பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று அறிவித்தபடி காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி ஆட்சியர் ரிஷப் , தாசில்தார் செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
விழாவினை ஒட்டி தினமும் இரவு பல வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது . தோலுக்கு இனியான் வாகனம், , அன்னவாகனம் ,புன்னை மர வாகனம், ஆஞ்சநேயர் வாகனம் ஆதிசேஷ வாகனம் , கருடாழ்வார் வாகனம் , சிம்மவாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், பல்லக்கு வாகனம் என சுவாமி வீதி உலா வர ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.
வருகின்ற 12-ம் தேதி தேரோட்டம் நிகழ இருக்கின்றது ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் , ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Image source: ABP.com