தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியிலும், திருச்செந்தூர், காயல்பட்டினம் நகராட்சிகள், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் காணம் நகர பஞ்சாயத்துகளுக்கு வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவைகுண்டம், ஏரல், பெருங்குளம் மற்றும் சாயர்புரம் ஆகிய நகர பஞ்சாயத்துக்களுக்கு சாயர்புரம் போப்ஸ் கல்லூரியிலும், ஆழ்வார்திருநகரி மற்றும் தென்திருப்பேரை நகர பஞ்சாயத்துகளுக்கு ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளியிலும், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் நாசரேத் ஆகிய நகர பஞ்சாயத்துகளுக்கு நாசரேத் பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளியிலும், கோவில்பட்டி நகராட்சிக்கு கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கழுகுமலை நகர பஞ்சாயத்துக்கு கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கயத்தாறு நகர பஞ்சாயத்துக்கு கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப் பள்ளியிலும், விளாத்திக்குளம், எட்டயாபுரம் மற்றும் வி.புதூர் நகர பஞ்சாயத்துகளுக்கு எட்டயாபுரம் பாரதியார் சென்டனரி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது கண்காமிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் முதல் அடுக்காகவும், ஆயுதப்படை காவலர்கள் இரண்டாவது அடுக்காகவும், தாலுகா காவலர்கள் மூன்றாவது அடுக்காகவும், 600 காவலர்கள் துப்பாக்கி ஏந்தியும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Image Source : Dailythanthi.com