ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதம் முழுவதும் சுமங்கலி பெண்கள் அனைவரும் அம்பாளுக்கு விரதம் இருந்து வழிபடும் தினமாகவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஆடி மாதத்தில் முதல் வெள்ளி கிழமை அன்றைய தினத்தில் வீட்டினை தூய்மைப்படுத்தி வீட்டு வாசலில் பூஜை அறையில் அரிசி மாவில் பெரிய கோலம் போட வேண்டும்.
மாவிலை வேப்பிலை தோரணங்கள் கட்டி அலங்கரித்து , தீபமேற்றி மங்கலகரமான சூழ்நிலையை வீட்டில் நிலவு செய்தால் மகாலட்சுமியே வீட்டிற்குள் நுழைவாள் என்பது ஐதீகம். முதல் வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைப்பது சிறப்பு.
அம்பாளுக்கு மிகவும் பிடித்தமான காயத்ரி மந்திரம் பாடல் ஒலித்தால் எதிர்மறை சக்திகள் மறைந்து, நேர்மறை சக்திகள் சூழ்ந்து வாழ்க்கையில் அனைத்தும் நல்ல விதமாக நடந்தேறும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நாம் பெறலாம்.
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு மாவிளக்கு போட்டு சுமங்கலி பெண்கள் புடவை வைத்து எலுமிச்சை பழம் , வெற்றிலை பாக்கு பழங்கள் ,மஞ்சள் குங்குமம் அனைத்தும் பூஜை அறையில் வைத்து மங்கலகரமாய் படைக்கும் பொழுது நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
திருமணம் விரைவில் கைகூட , குழந்தை பேறு உண்டாக, செல்வச் சிறப்பு உண்டாக, நோய் நொடி இன்றி வாழ…என அனைத்திற்கும் அம்பாளின் அனுகிரகம் நமக்கு கிடைப்பதற்கு, ஆடி மாதமாகிய இந்த மாதத்தில் தலை வெள்ளி என்று சொல்லக்கூடிய முதல் வெள்ளியில் தூய்மையான மனதோடு அம்பாளை நினைத்து வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து வளங்களும் நாம் பெறுவோம்.
23–7–2022 சனிக்கிழமை, ஆடி மாதம் 7ஆம் தேதி - முருகப்பெருமானுக்கு உகந்த ஆடி கிருத்திகை விரதம்
சிந்தை தித்திக்க முருகனையே நினைந்தருளி, கைகள் தித்திக்க மங்கள காரியங்கள் பல செய்து, மலர்வாய் தித்திக்க 'ஓம் சரவணபவ' எனும் சொல்தனை மலர்ந்தருளி, காது தித்திக்க கந்த சஷ்டி கவசம் என செவிதனில் கலந்தேற, ஆனந்த பெருக்கில் அருவிபோல் கண்ணீர் துளிகள் துளிர்ந்தெழ இந்நிலை போதும் போதும் ஐயா! பெரும்பேறு நான் கண்டேன்.. பெரும் நிலை நான் வேண்டேன். இந்நிலை மகிழ்ச்சிதனை என்றும் என்றும் என்றும் அருள்வாய் எம் அய்யனே முருகப் பெருமானே!
ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை மிகவும் விசேஷமான கிருத்திகை. கிருத்திகை என்றால் முருக பெருமானுக்கு உகந்த நாள்.
முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். ' நீங்கள் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களாக இருக்க வேண்டும் . உங்களுடைய நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் யார் என்னை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நினைத்த காரியம் நிச்சயம் கை கூட என்றும் நான் அருள் பாலிப்பேன்' என்று முருகப்பெருமான் ஆசி கூறுகின்றார்.
அதன்படி கார்த்திகை நட்சத்திரத்தில் நாம் முருக பெருமானை வழிபட்டு பல நன்மைகளை பெறுகின்றோம். வாழ்வினில் அனைத்து சுபிட்சமும் காண்கின்றோம்.
அனைத்து கிருத்திகையும் சிறந்தது என்றாலும் ஆடி ,கார்த்திகை , தை மாதத்தில் வரக்கூடிய கிருத்திகைக்கு மிகுந்த சக்தி உண்டு.
ஆடி கிருத்திகை விரத பலன்கள்;
திருமண நேரம் கை கூடி வரும். குழந்தை பேரு கிட்டும் . நோய்கள் அனைத்தும் தீரும். தோஷங்கள் அனைத்தும் விலகும் . பூமி வாங்குதல் சம்பந்தப்பட்ட நிலைமை வெற்றி உண்டாகும்.
இந்த அனைத்து காரியங்களும் ஜெயமாக ..ஆடி கிருத்திகை வைராக்கிய விரதம் கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்க.
ஆடிக்கிருத்திகை அன்று முழுவதும் முருக பெருமானை முழுமையாக நினைவில் வையுங்கள் .
இந்த ஆடி கிருத்திகை விளக்கேற்றுதல், மாவிளக்கு போடுதல் , கந்த சஷ்டி படித்தல், பூஜை வழிபாடு வாழ்க்கையின் அனைத்து சகல சௌபாக்கியத்தையும் கொடுக்கும் என்பதை உணர்ந்து, முருக பெருமானை மனமுருகி நினைத்து வழிபட்டு, சிந்தையில் அவன் நாமத்தை மலர்ந்தெழ செய்து, மகிழ்ச்சி பொங்க ஆடி கிருத்திகை விரதம் தனை முடித்து முருகப்பெருமானின் அருளை நாம் பெறுவோம்.
Image source: oneindia.com