தமிழக அரசு சார்பாக சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்குபெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு அலங்கார ஊர்தி நேற்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை வந்தடைந்தது. வேலூர் சிப்பாய் புரட்சி, மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், காளையார்கோவில் கோபுரம் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த ஊர்தியை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு மலர்தூவி வரவேற்பளித்தனர். தொடர்ந்து குறுக்குச்சாலை வழியாக தூத்துக்குடி மாநகரை சென்றடைந்த அந்த ஊர்தி, இன்று காலையில் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைகிறது. இதனை இன்று திருச்செந்தூரில் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.