கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர்ச்சந்தை பூக்கள் விற்பனைக்கு பெயர் பெற்றதாகும். இங்கு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டத்தில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்துக்கும் இங்கிருந்து பூக்கள் வாங்கிச் செல்லப்படும் நிலையில் நேற்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூ.750-க்கு விற்பனையான பிச்சி பூ நேற்று ரூ.1,500 உயர்ந்து 2,250 ரூபாய்க்கும், ரூ.700-க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.1100 உயர்ந்து ரூ.1,800-க்கும், அரளி பூ கிலோ ரூ.80, முல்லை பூ ரூ.2,000, சம்பங்கி ரூ.400, கனகாம்பரம் ரூ.750, வாடாமல்லி ரூ.70, துளசி ரூ.40, தாமரை பூ ஒன்று ரூ.10, கோழிப்பூ ரூ.60, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.70, ஸ்டெம் ரோஸ் ஒரு கட்டு ரூ.270, மஞ்சள் கேந்தி ரூ.45, சிவப்பு கேந்தி ரூ.55, மஞ்சள் செவ்வந்தி ரூ.100, வெள்ளை செவ்வந்தி ரூ.100, கொழுந்து ரூ.120, மரிக்கொழுந்து ரூ.120 என்ற விலையில் விற்பனையானது. இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், பூக்களின் விலை தினம் தினம் வரத்தை பொறுத்து மாறுபடும் நிலையில், நாளை முகூர்த்த நாள் என்பதாலும், பனிப்பொழிவினால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும், பிச்சி மற்றும் மல்லிகை பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தனர்.