தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளை ஆகிய ஊர்களுக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம்., சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இதற்காக வெம்பக்கோட்டையில் உள்ள மேட்டுக்காடு பகுதியில் 5 மீட்டர் அகலமும், 5 மீட்டர் நீளமும் அளவீடு செய்யப்பட்டு 12 குழிகள் தோண்ட அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த பணிகளை அகழ்வாராய்ச்சி இயக்குனர் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வெம்பக்கோட்டையில் அதிக அளவிலான நுண்கற்கருவிகள், சங்ககால மட்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளதும், வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த இக்கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள், தொல்லியல் அறிஞர் வேதாசலம் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரால் கண்டெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.