அருப்புக்கோட்டை அருகே உள்ள சென்னிலைக்குடி கிராமத்தில், எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் தலைமையில் வரலாற்றுத்துறை மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று அங்குள்ள கண்மாயின் மடையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கள ஆய்வு மேற்கொண்டவர்கள், திருச்சுழி அருகே சென்னிலைக்குடி கண்மாயின் மடையில் நீர்மட்ட அளவு கல்லானது தூணின் மேலே 10 அடி உயரத்தில் அழகிய வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கிடை மட்டமாக உள்ள குறுக்கு கல்லில் வட்டெழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த எழுத்தினை ஆய்வு செய்த போது, இக்கல்லானது 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு என தெரியவந்துள்ளது. இக்கல்வெட்டானது "ஸ்ரீ" என்ற மங்கல எழுத்துடன் தொடங்கி மனமே துணை என்ற வார்த்தையுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் உள்ள மடைக்கல்வெட்டில் மடை அமைத்தவரின் பெயர், அரசரின் பெயர், ஆட்சி, ஆண்டு, இடம் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த கல்வெட்டில் எந்த குறிப்பும் இடம்பெறாமல் மனமே துணை என்ற வார்த்தை மட்டும் பொறிக்கப்பட்டு உள்ளது. இது மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற வாக்கியத்தை உணர்த்துவதாக அமைகிறது. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள வட்டெழுத்து கல்வெட்டுக்களில் இது சற்று வித்தியாசமான கல்வெட்டாகும். இந்த கல்வெட்டில் திருச்சுழி ஊரின் பெயரானது பருத்திக்குடி நாட்டு தேவதானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.