செய்திக்குறிப்புகள்:
சுந்தரவல்லி அம்மன் கோவிலில் தமிழ் கல்வெட்டுக்கள்.
மிகப் பழமையானது என ஆய்வில் தகவல்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பரளச்சி சுந்தரவல்லி அம்மன் கோவிலில் இரண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளை மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர் திரு. முனீஸ்வரன் உதவியுடன் படி எடுத்து ஆய்வுகள் செய்தனர். இதில் இரண்டு கல்வெட்டுக்களும் மிகப் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது.
சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தின் உட்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் 4½ அடி நீளம், 1½ அடி அகலம் 9 வரி கொண்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் கோவிலுக்கு உரிய நிலங்களை குறியீடு களாகவும், அரைமா, அரைக்காணி, முந்திரி, கீழரை போன்ற நில அளவை முறையும், நிலத்திற்கு தேவையான நீர் பாசன செய்யும் முறை பற்றியும் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் முன்பு குளத்தங்கரையில் கருங்கல்லில் கிடைத்த மற்றொன்றில் 1 அடி அகலம், 4 அடி நீளம், 6 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. நிலத்தின் எல்லை, குளம், இறையிலி போன்ற சொற்கள் இருந்தாலும் பல சொற்கள் தேய்மானம் முழுமையான பொருளை அறிய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.