தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட கோவில்களான நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமாரக்கோவில் குமாரசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றன. தைமாத வெள்ளிக்கிழமை தினமான நேற்று கோவில்களுக்குள் செல்ல முடியாததால், பக்தர்கள் கோவில் வாசலில் நின்றபடியே சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.