தமிழகம் முழுவதும் வருடம்தோறும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறையினர் மூலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 28, 29-ந் தேதிகளில் முதல் கட்டமாக கடலோர நீர்பறவைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கணக்கெடுக்கும் பணி பறவை ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் சுசீந்திரம் குளம், பறக்கை குளம், பால்குளம், தேரூர் குளம், மாணிக்க புத்தேரி குளம், தத்தையார்குளம், அச்சங்குளம், நரிக்குளம், அழகப்பபுரம், புத்தேரி குளம், இறச்சகுளம், கோதண்டராமர் குளம், வேம்பனூர் குளம், ஆளூர் குளம் ஆகிய 14 குளங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 42 வகையான 5,317 நீர் பறவைகள் மற்றும் 28 வகையான 2002 நிலப்பறவைகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.