கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று ஆட்சித்தலைவர் அரவிந்த், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் 8 மணி நேர சுழற்சி முறையில் தீவிரமாக பணி புரிய வேண்டும், ஒவ்வொரு சுழற்சி நேரம் முடிந்ததும் காலதாமதமின்றி பணிக்கு வர வேண்டும், அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட வேண்டும், வாகன தணிக்கையின்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணமின்றி இருந்தால் அத்தொகையினை பறிமுதல் செய்ய வேண்டும், மேலும் பறிமுதல் செய்த தொகையை நீதிமன்ற உத்தரவின்படி அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும், பொதுமக்களிடம் இருந்தும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் வரும் புகார்களின் அடிப்படையில் உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும், வேட்பாளரோ அல்லது வேட்பாளர் சார்பிலான நபரோ பணமோ, பரிசு பொருட்களோ பொதுமக்களுக்கு வினியோகம் செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறல் குறித்து அதன் விபர அறிக்கையினை தினசரி படிவம் பி-ல் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், மாவட்ட ஊராட்சி செயலாளர் முருகானந்தம், உதவி இயக்குனர் (தணிக்கை) மோகன் உள்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.